Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: குமாரகோயில் /வேளி மலை/ வள்ளி திருமணம் நிகழ்ந்த திருத்தலம்! / kumaracoil thuckalay / nagercoil
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது வேளிமலை குமார கோயில். புராணச் சிறப்பு மிக்க இந்தத் தலத்துக்கு வ...
கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது வேளிமலை குமார கோயில். புராணச் சிறப்பு மிக்க இந்தத் தலத்துக்கு வேளி மலை என்ற பெயர் வந்தது எப்படி?

முருகப் பெருமானுக்கும் வள்ளிக்கும் இடையே காதல் வேள்வி நடந்த மலை என்பதால், இதற்கு வேள்வி மலை என்று பெயர். இதுவே பின்னர் வேளி மலையாக மருவியது. கேரளத்தில் திருமணத்தை 'வேளி' என்பர். முருகப் பெருமான் இங்கு வள்ளியைக் காதலித்து, கடிமணம் புரிந்ததால், 'வேளி மலை' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.
இந்த மலையின் அடிவாரத்தில் கோயிலுக்கு நேர் கீழாக அழகான திருக்குளம். அதன் கரையில் ஒரு விநாயகர் சந்நிதி. இவரை வணங்கி விட்டு, 38 படிகள் ஏறிச் சென்றால், குன்றின் உச்சியில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறது திருக்கோயில்.

கோயிலுக்குள் நுழைந்ததும் கொடிமரம். அதைத் தாண்டிச் சென்றால், இடப் புறம் விநாயகர். பிரதான மூர்த்தியான முருகப் பெருமான் சுமார் 8 அடி 8 அங்குல உயரத்தில், அழகிய இரு திருக்கரங்களுடன் கருவறையில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். இடக் கரம் இயல்பான நிலையில் பாதத்தை நோக்கியிருக்க, வலக் கரம் வரத முத்திரை யுடன் திகழ்கிறது. இவர் பெரும்பாலான நாட்களில் சந்தனக் காப்புடன் தரிசனம் தருகிறார்.


முருகப் பெருமானுக்கு இடப் புறம் சுமார் 6 அடி 2 அங்குல உயரத்தில் வள்ளிதேவி. இங்கு, முருகப் பெருமானின் அருகில் வள்ளிதேவியை மட்டுமே தரிசிக்க முடியும் (தெய்வானையின் விக்கிரகம் இல்லை). இதுவே இந்தக் கோயிலின் சிறப்பு. கருவறையை அடுத்து சிவபெருமான் சந்நிதி. அருகில் நந்தி. இதையட்டி தெற்கு நோக்கியவாறு ஆறுமுகநயினார் மற்றும் நடராஜர். அருகிலேயே இந்தக் கோயிலின் தல விருட்சமான வேங்கை மரத்துக்கான தனிச் சந்நிதி.

வள்ளியை முருகப் பெருமான் காதலித்த காலகட்டம்... அப்போது வள்ளியின் உறவினர்கள் வள்ளியைத் தேடி அங்கே வர... வள்ளியுடன் இருந்த முருகப் பெருமான் வேங்கை மரமாக மாறினார் என்கிறது புராணம். எனவே இங்கு வேங்கை மரத்துக்கு சிறப்பு உண்டு. இந்த வேங்கை மரம், சுமார் 3 அடி உயரத்தில் கிளைகள் வெட்டுப்பட்ட நிலையில் உள்ளது. இதன் எஞ்சிய பகுதிக்கு உடை அணிவித்து, தினசரி பூஜைகள் நடைபெறுகின்றன.

கோயிலின் மேற்கு வாயிலில் தட்சனுக்கும் தனிச் சந்நிதி உண்டு. கோயிலுக்குள் நுழையுமுன் ஆட்டுத்தலையுடன் கூடிய இந்த தட்சனை வணங்குகிறார்கள். 'தன்னை அவமதித்த தட்சனது யாகமும் அகங்காரமும் அழியும்படி சிவபெருமான் சாபமிட்டார். அதன்படி சிவ அம்சத் தினரான வீரபத்திரரால் அழிவை சந்தித்த தட்சன் இறுதியில் ஆட்டுத்தலையுடன் விமோசனம் பெற்றான்!' என்கிறது புராணம்.

இங்கு, தட்சனை தரிசித்த பிறகே முருகனை தரிசிக்கச் செல்கிறார்கள். ஏனெனில், வழிபாடு முடிந்து பின் வாசல் வழியாகத் திரும்பும்போது தட்சனை தரிசித்தால் கிட்டிய புண்ணியம் பறி போகும் என்பது ஐதீகம். ஆகையால் அப்போது, தங்கள் கைகளால் கண்களை மறைத்தவாறு தட்சனது சந்நிதியைக் கடந்து செல்வர். திருக்குளத்தின் அருகே கஞ்சி தர்மத்துக்கான 'கஞ்சிப்புரை' அமைந்துள்ளது.

இங்கு வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் 'கஞ்சி தர்மம்' விசேஷமானது. இது நோய் தீர்க்கும் அருமருந்தாக பக்தர்களால் கருதப்படுகிறது. கஞ்சி தர்மம் முடிந்ததும் அந்த இடத்தில் தொழுநோயாளிகள் அங்கப்பிரதட்சணம் செய்கிறார்கள். இதனால் தங்களது நோய் விலகும் என்று நம்புகிறார்கள்.


வருடம்தோறும் இங்கு வைகாசி விசாகத் திருவிழாவின் 6-ஆம் நாளன்று மஞ்சள் தடவிய தாளில் எழுதப் பெற்ற வள்ளிக்குச் சொந்தமான உடைமைகளின் விவரம் தேவஸ்வம்போர்டு (தேவஸ்தானம்) ஊழியர் ஒருவரால் இங்கு வாசிக்கப்படுகிறது.  
கார்த்திகை தீபத் திருநாளில் இங்கு சொக்கப்பனை எரிக்கப்படுகிறது. இங்கு பல வகை காவடிகள், துலா பாரம், பிடிப்பணம் (கையளவு காசு) வாரியிடுதல், குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுதல், சோறு ஊட்டுதல், காது குத்துதல், மாவிளக்கு ஏற்றுதல், உப்பு- மிளகு காணிக்கை செலுத்துதல், அரிசி- பயறு வகைகள், காய்கறிகள்- பழங்கள் காணிக்கை செலுத்துதல், அங்கப் பிரதட்சணம், மயில்களுக்கு பொரிகடலை- தானியங்கள் வழங்குவது போன்ற நேர்ச்சை வழிபாடுகளும் நடக்கின்றன. இவை தவிர பசு மற்றும் காளைக் கன்றுகளை கோயிலுக்கு நேர்ந்தும் விடுகிறார்கள். வாகனங்களை வாங்கு பவர்கள் முதலில் இந்தக் கோயிலுக்குக் கொண்டு வந்து வாகனச் சாவியை முருகன் திருவடிகளில் சமர்ப்பித்து வழிபட்டு எடுத்துச் செல்கிறார்கள்.

கோயிலில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ள ஒரு குகையை 'வள்ளிக் குகை' என்பர். முருகப் பெருமான்- வள்ளி திருமணம் இந்த பகுதியில் நடந்ததாகக் கருதப்படுகிறது. தற்போது, குகை அருகே மண்டபம் ஒன்றும் சிறிய அளவில் விநாயகர் கோயில் ஒன்றும் உள்ளன. இங்கு, விநாயக சதுர்த்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த இடத்தையட்டி முருகன்- வள்ளி திருமண சம்பவத்துடன் தொடர்பு கொண்ட தினைப்புனம், வள்ளிச் சோலை, வட்டச் சோலை, கிழவன் சோலை ஆகிய இடங்கள் உள்ளன. வள்ளிதேவி நீராடிய சுனை அருகே பாறையில்- விநாயகர், வேலவர், வள்ளிதேவி ஆகியோரது புடைப்புச் சிற்பங்களைக் காணலாம்.


குமார கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்று, பங்குனி மாதம் அனுஷ நட்சத்திர நாளில் நடைபெறும் வள்ளி திருமணம். அன்று காலையில் பல்லக்கில் எழுந்தருளும் முருகப் பெருமான், வள்ளி குகை அருகே உள்ள கல்யாண மண்டபத்துக்குச் செல்கிறார். வழியெங்கும் மக்கள் வரவேற்பு கொடுக்கிறார்கள். மண்டபத்தில் தீபாராதனை மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

அப்போது, கோயிலைச் சுற்றியுள்ள சத்திரங்கள் மற்றும் மலைப்பாதையின் பல இடங்களிலும் அன்னதானம், கஞ்சி தர்மம் ஆகியவை நடைபெறும். பிற்பகலில் முருகன்- வள்ளி தம்பதியை பல்லக்கில் அழைத்து வருகிறார்கள். அப்போது முருகப் பெருமானுடன் குறவர்கள் போரிடும் 'குறவர் படுகளம்' எனும் நிகழ்ச்சி மலைப்பாதை நெடுகிலும் நடைபெறுகிறது. இறுதியில் கோயிலின் மேற்கு வாசலில் குறவர்கள் முருகப் பெருமானிடம் தோல்வியடைந்து சரணடையும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் அங்கு மலையில் வாழும் குறவர் இனத்தவரே கலந்து கொள்கின்றனர்.

இரவு 8 மணியளவில், அபிஷேக- ஆராதனைக்குப் பின் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கல்யாண மண்டபத்தில் முறைப்படி வள்ளிக்கும் முருகனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதன் பின்னர் தேன், தினைமாவு மற்றும் குங்குமம் ஆகியவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

குமாரகோயில் முருகன், ஆண்டுக்கு இரண்டு முறை நீண்ட யாத்திரை மேற்கொள்வது விசேஷம். இங்கு நவராத்திரி பூஜையின்போது பல்லக்கில் உலா புறப்படும் முருகப் பெருமான், முதலில் பத்மநாபபுரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்பு அங்கிருந்து சரஸ்வதி அம்மன், சுசீந்திரம்- முன்னுதித்த நங்கை சகிதம் திருவனந்தபுரத்துக்கு வருகிறார். இரவில் குழித்துறை என்ற இடத்தில் தங்கி, மறு நாள் அங்கிருந்து புறப்பட்டு கரமனை வருகிறார். பின்பு அங்கிருந்து வெள்ளிக் குதிரையேறி திருவனந்தபுரத்தில் நவராத்திரி பூஜை முடிவது வரை காட்சியளிக்கிறார். அப்போது அங்கு அம்பு சார்த்துதல், வேல் குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்களது அனைத்து வகையான நேர்ச்சைகளை ஏற்றுக் கொண்டு குமாரகோயிலில் வந்து சேருகிறார்.

சுசீந்திரம்- தாணுமாலயப்பெருமாள் கோயில் தேரோட்டத்தின்போதும் குமாரகோயில் முருகப் பெருமான் பல்லக்கில் எழுந்தருளி கிருஷ்ணன் கோயிலில் இரவு தங்கி மறுநாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு சுசீந்திரம் செல்கிறார். அங்கு பக்தர்களுக்கு அருள் பாலித்த பின் குமாரகோயிலுக்குத் திரும்புகிறார்.

குமாரகோயிலில் பங்குனி- திருக்கல்யாணம்-குறவர் படுகள வைபவம்; சித்திரை- விசுக்கனி; வைகாசி திருவிழா; ஆடி அமாவாசையன்று கோயிலில் நெற்கதிர்களை நிறை செய்தல்- அவற்றை பக்தர்கள் தங்களது இல்லங்களுக்கு எடுத்துச் செல்லுதல்; ஆவணி- மலர் முழுக்கு விழா; புரட்டாசி- நவராத்திரி பூஜைக்காக சுவாமி திருவனந்தபுரம் எழுந்தருளல், ஐப்பசி- சூரசம்ஹாரம், கந்த சஷ்டி; கார்த்திகை- தீப விழா; மார்கழி- சுசீந்திர தேரோட்டத்துக்கு முருகன் புறப்படுதல்; தைப்பூசத் திருவிழா ஆகிய விழாக்களும் சிறப்புற நடைபெறுகின்றன.Reactions:

About Author

Advertisement

Post a comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top