Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றிய வரலாற்று புதையல்கள்!!!
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
ஜாலியன் வாலாபாக் படுகொலை என்பது , அமிர்தசரஸ் படுகொலை என்றும் கூட அழைக்கப்படுகிறது. நடந்த தினம் சரியாக 93 ஆண்டுகளுக்கு முன்புதான். 191...

ஜாலியன் வாலாபாக் படுகொலை என்பது, அமிர்தசரஸ் படுகொலை என்றும் கூட அழைக்கப்படுகிறது. நடந்த தினம் சரியாக 93 ஆண்டுகளுக்கு முன்புதான். 1919, ஏப்ரல் 13ம் நாள் இந்த கோர நாடகம் அரங்கேறியது. இந்திய சரித்திரத்தின் முகத்தில் கருப்பு மை பூசிய கெட்ட ஞாயிற்றுக்குக் கிழமை அது. வடஇந்திய நகரமான அமிர்தசரசில், சீக்கியர்களின் பொற்கோவிலுக்கு 400 மீட்டர் தொலைவில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்ற பொது பூங்காவில் வெள்ளை காலனியாதிக்கத்தால், ஏவிவிடப்பட்ட துப்பாக்கிக் குண்டுகள், அப்பாவி மக்களைக் கொன்று அவர்களின் உயிரைக் குடித்தது. இந்த நாடகத்தின் சூத்ரதாரி பிரிகேடியர் ஜெனரல் டயர் என்ற கொடுங்கோல் அரக்கன். இவன்தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிய பொது மைதானத்தை சுடுகாடாக்கியவன். அந்த நாசகாரப் படுகொலையில் இந்திய பிரிட்டிஷ் அரசின் தகவல்படி, 379 பேர் இறந்ததாகவும், 1,100 பேர் காயமுற்றதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையில் நடந்தது என்ன தெரியுமா?

ஜாலியன் வாலாபாக்கில் நடக்க இருந்த பொதுக்கூட்ட உரையைக் கேட்க, சுமார் 15,000 – 20,000 மக்கள் குழுமி இருந்தனர். அப்பாவி ஜனங்கள்மீது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, ஜெனரல் டயர் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டான். அந்த மைதானத்தின் நான்கு பக்கமும் மதிற்சுவர். உள்ளே செல்ல ஒரே ஒரு சின்ன சந்து மட்டுமே. அதிலும் குண்டுகள் நிரப்பிய பீரங்கி நிறுத்தப்பட்டு இருந்தது. யாரும் தப்பித்தவறி தப்பிக்க நினைக்கக்கூட முடியாது. டயரின் ஆணைப்படி, ஒரே சமயத்தில் 90 துப்பாக்கிகள் சரமாரியாக இயங்கி, குண்டுகளைக் கக்கின. 10 நிமிடத்தில் 1650 ரவுண்டுகள் காலியாயின. கோர தாண்டவ ஆட்டம் போட்டு முடித்தாகிவிட்டது. ஆண். பெண், குழந்தை என வேறுபாடின்றி அனைவர் மேலும் கொலைத் தாக்குதல்..

மக்கள் வேறு வழி இன்றி, உயிர்ப்பயத்தில் அங்கிருந்த கிணற்றில் குதித்தனர். இந்திய தேசிய காங்கிரசின் கணக்குப்படி, துப்பாக்கிக் குண்டுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை சுமார் 1,500க்கு மேல். படுகாயம் அடைந்தவர்கள் சுமார் 3,000க்கும் மேல். ஜாலியன்வாலாபாக் படுகொலைக்குப் பின் டயர் பதவி நீக்கம் செய்யப்பட்டான். ஆனால் பிரிட்டனில் அவன் கொண்டாடப்பட்டான்.

<== பிரிகேடியர் ஜெனரல் டயர் 

படுகொலையின் பின்னணிதான் என்ன?
முதல் உலகப் போர், பிரிட்டிஷார்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, ரொம்பவும் ராஜவிசுவாசத்துடன், ஐரோப்பிய அரசுக்கு நல்லது செய்யும் நோக்கத்துடன் துவங்கியது. இந்திய வீரர்கள் போரில் ஈடுபட்டிருந்தனர். இவர்களில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு சேவகம் செய்யவும் பணியாளர்கள் இருந்தனர். இந்தியாவிலிருந்து, ஏராளமான பொருட்களும், உணவும், பணமும், ஆயுதங்களும் போருக்கு அனுப்பப்பட்டன. இருப்பினும் வங்கம் மற்றும் பஞ்சாபி மக்கள் காலனியாதிக்க எதிர்ப்பில் ஈடுபட்டனர். புரட்சியின் செயல்பாடுகள் இங்கெல்லாம் வெடித்தன.

முதல் உலகப்போர் முடியும் தருணத்தில் இந்தியா உறைந்து கிடந்தது. 1917ல், இந்தியச் செயலர், ஈ.எஸ், மாண்டேகு, சீர்திருத்தங்கள் கொண்டுவந்தார். ரஷ்யாவில் அப்போதுதான் புரட்சி நடந்து முடிந்து, தோழர் லெனின் தலைமையிலான அரசு பதவி ஏற்றது. அதன் எதிரொலிகள் இந்தியாவிலும் வெளிப்பட்டது. போர் 1918, நவம்பர் 11ல் முடிவுற்றது. ஆனால் 43,000 இந்திய வீரர்கள் போரில் மடிந்தனர். 1919, பிப்ரவரி 6ல் ரௌலட் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்திய பொருளாதாரம் சிதைந்தது; பணவீக்கம் அதிகரித்தது. நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இந்தியர்களின் மனதில் வெறுமையும், வெறுப்பும் நிறைந்தது. இந்தியா முழுமையும் அமைதியின்மை நிலவியது. தங்களின் தாயகத்தின் விடுதலையை எதிர்பார்த்து இருந்தபோது, அவர்கள் இறுக்கிக் கட்டப்பட்டதாக உணர்ந்தனர்.

                   கவர்னர் மைக்கேல் ஓ டையர் ==>> 

பஞ்சாப் லெப்டினன்ட் கவர்னர் மைக்கேல் ஓ டையர் இருக்கும் சட்டங்கள் போதாதென்று புதிய சட்டங்கள் போட்டு மிரட்டினார்; மக்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கினார். அடக்குமுறை தலை விரித்தாடியது. விடுதலைப் போராட்ட வீரர் எனச் சந்தேகப்படும் யாரையும் விசாரணை இன்றி கைது செய்து, எவ்வளவு காலம் வேண்டுமாயினும் சிறையில் வைத்திருக்கலாம். அவர்கள் வழக்குரைஞர் வைத்து வாதாட அனுமதி இல்லை.                                                                                          
இந்த காலகட்டத்தில் மகாத்மா காந்தி, இந்த சட்டங்கள் தேவை இல்லை என்று அறிவித்து, ஓத்துழையாமை இயக்கம் நடத்த திட்டமிடுகிறார். காந்தியின் இந்த புதிய அணுகுமுறை, மக்களிடையே பரபரப்பானது. நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மார்ச் 30ல் பந்த் நடத்த அழைப்பு. 1919, காந்தியின் அறைகூவலுக்கிணங்க அமிர்தசரஸ் நகரில் வேலை நிறுத்தம் ஏப்ரல் 6க்கு ஒத்தி வைப்பு. அங்கு ஏப்ரல் 9ம் நாள் ராம நவமி. அன்று ஓர் ஊர்வலம் நடக்கிறது. இந்துக்களும், முகம்மதியர்களும் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக, அனைவரும் ஊர்வலத்தில் பங்கு பெறுகின்றனர். காந்தி பஞ்சாபில் நுழையத் தடை விதிப்பு. புகழ்பெற்ற தலைவர்களான, டாக்டர் சைபுதீன் கிச்சுலு & டாக்டர். சத்யபாலை கைது செய்கின்றனர். பஞ்சாப் முழுவதும் கிளர்ச்சியும் கலகமும் பரவியது. மக்கள் ஏப்ரல் 10ம் நாள் கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுவிக்கக் கோரி, துணை ஆணையரைச் சந்திக்க விரும்புகின்றனர். ஆனால் அவர்களை நோக்கி துப்பாக்கி வெடித்தது. இதனால் மக்களின் கோபம் வெடித்தது. அமிர்தசரசில் சட்டம் குலைந்தது. 3 பிரிட்டிஷ்காரர்கள் கொல்லப்பட்டனர். ஒரு பெண் காயமடைந்தார். ஏப்ரல் 12, சௌத்ரி புக்க மால் கைது. அமிரதசராஸ் அமைதியை இழந்தது.

ஏப்ரல் 11 அன்று ஜலந்தரிலிருந்து ஜெனரல் டையர் வருகிறார்; நகரைக் கைப்பற்றுகிறார். நகரம் துணை ஆணையரின் கைக்குள் வந்தது. ஏப்ரல் 13 அன்று பைசாகி என்ற சீக்கிய புத்தாண்டு தினம்; அறுவடைத் திருநாளும் கூட. அன்று மாலை ஜாலியன் வாலாபாக்கில் ஒரு கண்டன பொதுக்கூட்டம் நடத்த அறிவிக்கப்பட்டது. கிராமத்திலிருந்தும், சுற்றியுள்ள இடங்களிலிருந்தும் சுமார் 20,000 மக்கள் கூடினர். சுமார் 4.30க்கு கூட்டம் துவங்கியது. அதன் பின் ஒரு மணி நேரம் சென்று, ஜெனரல் டையர் அங்கே சுமார் 150 ட்ரூப்புகளுடன் வருகிறார். முன் வாசல் வழியாக, இருவர் கூட சேர்ந்து செல்ல முடியாத சின்ன சந்தின் வழியாக, அவர்கள் வந்து நிற்கின்றனர். மைதானத்தில் வெளியேற இதைத் தவிர வேறு வழியே கிடையாது. சூரியன் தன் கடமையை முடித்துவிட்டு மறையப்போகிறான். அதற்கு இன்னும் 6 நிமிடங்களே உள்ளன. டயர் நம் இந்திய சகோதரர்களைச் சுட ஆணையிடுகிறான், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி. மக்களைக் கலைந்து செல்ல டயர் அறிவிக்கவில்லை; ஆனால் குண்டுமழை பொழிகிறது. குண்டுகள் தீரும் வரை சுட்டேன் எனக் கொக்கரிக்கிறான் டையர். 1650 ரவுண்டுகள் சுட்டு முடித்து, கிட்டத்தட்ட குண்டுகளே இல்லை என்ற நிலையில்தான், துப்பாக்கியின் ஒலி நிற்கிறது. விமானங்கள் வந்தும் அவ்விடத்தில் குண்டு வீசுகின்றன.

ஜாலியன் வாலாபாக் படுகொலையை நாடு முழுவதும் கண்டித்தது. அதன் பின் இது தொடர்பாக மக்கள் நடத்திய போராட்டத்திலும் 12 சாவுகள். அப்போது குண்டடிபட்டுக் கிடந்தவர்களுக்கும், சாவின் பிடியில் இருந்தவர்களுக்கும் குடிநீர் தந்து கொண்டிருந்தான் ஒரு சிறுவன். அவன் பெயர் உத்தம் சிங்.

இந்த நாசகார படுகொலையைக் கண்டு மனதில் வெறுப்பும், வன்மமும் வளர்ந்தது. என் மக்களை கொன்று குவித்தவர்களை நானும் கொல்வேன் என்று உறுதி எடுத்தான். அதன் பின் 21 ஆண்டுகள் தனது கோபத்தை அடைகாத்தான். படுகொலையின் கதாநாயகன் ஜெனரல் டயர் 1927லேயே இறந்து விட்டதால், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு ஆணை பிறப்பித்த மைக்கேல் டையரை 1940, மார்ச் 13ம் நாள், லண்டனில், காக்ஸ்டன் ஹாலில் கொலை செய்தான் உத்தம்சிங் என்ற ராம் முகமது சிங் ஆசாத். தொடர்ந்து ஆறு முறை மைக்கேல் டயரின் மேல் குண்டு பொழிந்தான் உத்தம்சிங். இதுபோன்ற கணக்கிலடங்கா உயிர்ப்பலிகளும், தியாகங்களும் நிறைந்ததுதான் இந்திய தேச விடுதலையின் சரித்திரம்.

நன்றி!!!

நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக உங்கள் பதிவை இட்டு செல்லுங்கள்
Reactions:

About Author

Advertisement

Post a comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top