Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: வெள்ளைபடுதல் அதிகம் ஆனால் வெட்கப்படாமல் வெளிப்படையாக மருத்துவரிடம் பேசுங்கள்
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
பெண்களே! வெட்கப்படாமல் வெளிப்படையாக மருத்துவரிடம் பேசுங்கள் மகளைவிட தாய் வெட்கத்தில் இருப்பதாகத் தெரிந்தது. சற்றுத் தயங்கிய பின் த...

பெண்களே! வெட்கப்படாமல் வெளிப்படையாக மருத்துவரிடம் பேசுங்கள்

மகளைவிட தாய் வெட்கத்தில் இருப்பதாகத் தெரிந்தது. சற்றுத் தயங்கிய பின் தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள்.

"இந்தப் பிள்ளை மெலிஞ்சு கொண்டு போறாள்....
சோம்பிக் கொண்டு கிடக்கிறாள்...பசியும் குறைவு...."
நேரடியாக விடயத்திற்கு வராது சுற்றி வளைத்துக் கொண்டிருந்தாள் அம்மா.

சற்று மெல்லிய தோற்றம் கொண்டவளாயினும், மகளின் முகத்தில் நோயின் வாட்டம் தென்படவில்லை. அழகாக, திரட்சியாக பதின்ம வயதுகளின் கவர்ச்சியுடன் தோன்றினாள். 

மகளிலிருந்து கண்ணை விலக்கி அம்மாவில் பார்வையைப் பதித்தேன். சற்று முன் நகர்ந்த அம்மா தனது குரலைத் தாழ்த்தி.....

"இவளுக்கு சரியா வெள்ளை படுகுது. உருகிக் கொண்டு போறாள்."

வெளிப்படையாகப் பேசுங்கள்.

இவர்கள் சற்று வெட்கப்பட்டவர்கள். காலம் மாறிவிட்டது.
இன்றைய இளம் பெண்கள் பலர் தாயின் துணையின்றித் தனியாகவே வந்து தங்கள் பாலியல் பிரச்சனைகளை வெளிப்படையாகப் பேசுமளவிற்கு முன்னேறிவிட்டார்கள்.

தன்னம்பிக்கை வளர்ந்து விட்டது.
திருப்தியடையக் கூடிய மாற்றம் என்பதில் சந்தேகம் இல்லை.

பாலியல் உறுப்புகளில் அரிப்பு, வேறுநோய்கள், மாதவிடாய்ப் பிரச்சனைகள், பாலுறவின் போது ஏற்படக் கூடிய உடல் உளப் பிரச்சனைகள் என எதுவானாலும் மருத்துவருடன் வெளிப்படையாகப் பேச வேண்டும்.

பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் இது பொருந்தும்.


வெள்ளைபடுதல்

இந்த வெள்ளைபடுதல் என்பது பெரும்பாலும் நோயே அல்ல.
Vaginal Discharge என ஆங்கிலத்தில் சொல்வதை
நல்ல தமிழில் யோனிக் கசிவு எனலாம்.

பெண் பாலுறுப்பிலிருந்து சற்றுத் திரவம் கசிவது இயற்கையானது. வாயிலிருந்து எச்சில் ஊறுவது போன்றது.
வாய் எந்த நேரமும் ஈரலிப்பாக இருப்பதற்குக் காரணம் எச்சில்.

அதேபோல பெண்ணுறுப்பு அதன் சுரப்புகள் காரணமாக எப்பொழுதும் ஈரலிப்பாக இருக்கும்.

  • கிருமிகள் தொற்றாதிருக்கவும்,
  • உடலுறவின் போது இன்பம் அளிக்கவும்,
  • மகப்பேற்றின் போது துணையாக இருப்பதற்கும் இது அவசியம்.
எனவே குழந்தை பெற்றெடுக்கக் கூடிய வயதுகளில் மிகவும் அவசியமானது. விசனிக்க ஏதும் இல்லை.

உணவில் ஆசை ஏற்பட்டால் எச்சில் அதிகம் ஊறும்.
அதேபோல பாலுணர்வு மேலெழும்போது யோனியிலிருந்து சுரப்பது அதிகமாகும்.

பதின்ம வயதுகளில் பாலியல் உணர்வுகள் மெருகேறும்போது பையன்கள் தங்கள் ஆண்குறிகள் திடீர் திடீரென விறைப்படைவது கண்டு வியப்பிற்கும் குற்ற உணர்விற்கும் ஆளாவது போலவே பெண்பிள்ளைகளும் இந்த வெள்ளை படுதலைக் கண்டு அசூசை அடைகிறார்கள்.

தாய்மார் தங்கள் இளமை நினைவுகளை மீளநினைத்து தங்கள் பெண்பிள்ளைகளுக்கு ஆறுதல் அளிப்பது முக்கியமாகும்.
ஆயினும் பல நோய்களாலும் யோனியிலிருந்து திரவம் கசியக் கூடும் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். 

சாதாரண வெள்ளைபடுதல்


சாதாரண வெள்ளை படுதல் என்பது சற்று வழவழப்பான எச்சில் போன்ற தெளிவான திரவமாகும்.
பிறப்பு உறுப்பில் உள்ள கருப்பைக் கழுத்திலிருந்து பெருமளவு சுரக்கும். அதேபோல யோனியின் சுவர்களிலிருந்தும் கசியும்.

சுரக்கும் போது இது வெண்மையாக இருந்தாலும் காற்றுப்பட்டதும் சற்று மஞ்சள் நிறமாகலாம்.
அதேபோல உள்ளாடைகளில் பட்ட பின்ரும் நிறம் மாறலாம்.
உடலிலுள்ள பெண்ஹோர்மோன் ஆன ஈஸ்ரோஜின் இதை ஓரளவு கட்டுப்படுத்துகிறது.

வழமையாக ஓரளவு இருக்கும் இந்த வெள்ளைபடுதல் மனஅழுத்தங்களின் போது சற்று அதிகரிக்கலாம். ஏனைய மன அழுத்தங்கள் போலவே வெள்ளை படுதல் பற்றிய பய உணர்வும், அசூசை ஆகியவை உள்ளதை மேலும் மோசாமாக்கிவிடும். 

பல இளம் பெண்கள் மாதவிடாய்க்கு இடைப்பட்ட சில தினங்களில் இது அதிகமாவதை அவதானித்திருப்பர். சூலகத்திலிருந்து முட்டை வெளியேறும் நேரத்தில் இவ்வாறு கூடியளவு வெள்ளைபடலாம்.

கருவுற்று இருக்கும் காலங்களிலும் வெள்ளைபடுவது அதிகரிக்கும்.
முன்னரே குறிப்பிட்டது போல பாலியல் ரிதியான உணர்வுகள் கிளறும்போதும் வெள்ளை படுதல் அதிகரிக்கும்.

வேறு நோய்கள் காரணமாக

தொற்று நோய், புற்றுநோய், ஒவ்வாமை போன்ற பல காரணங்களலும் வெள்ளை படுதல் ஏற்படலாம்.
நீரிழிவு இருந்தால் பங்கஸ் தொற்று நோயாலும் தோன்றலாம்.

ஆனால் இவற்றின்போது பெரும்பாலும் அரிப்பு, எரிவு, கெட்ட மணம், போன்றவை சேர்ந்திருக்கும். 

நோய்கள் காரணமா?

வேறு நோய்கள் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகப்படுவதற்கு உரிய அறிகுறிகள் என்ன?

  • இதுகாலம் வரை இல்லாதவாறு திடீரென அதிகரிக்கும் வெள்ளைபடுதல்
  • அதன் நிறத்தில் மாற்றம்
  • அதன் மணத்தில் திடீரென ஏற்படும் மாற்றம்.
  • பெண் உறுப்பிலும் அதனைச் சுற்றியும் எரிவு, சினப்பு, அரிப்பு போன்றவை தோன்றுதல்.
  • மாதவிடாய் இல்லாத தருணங்களில் வெள்ளையில் இரத்தக் கறையும் தென்படல்.
வெள்ளையுடன் இரத்தக் கசிவும் சேர்ந்திருந்தால் புற்றுநோயாகவும் இருக்கலாம். ஆனால் இது பெரும்பாலும் மாதவிடாய் நின்ற பெண்களிலேயே அதிகம் ஏற்படும்.

நீங்கள் செய்யக் கூடியவை என்ன?

உங்கள் பாலுறுப்பை சுத்தமாகவும் ஈரலிப்பு இன்றியும் வைத்திருங்கள்.

பல பெண்கள் உடலுறவின் பின்னரும் மாதவிடாய் காலங்களிலுத் தமது உறுப்பைச் சுத்தமாக வைத்திருப்பதாகக் கூறி நீரை உள்ளுக்குள் அடித்துச் சுத்தப்படுத்துவார்கள்.

இது தவறான முறை. அவ்வாறு செய்யும்போது பெண் பாலுறுப்பின் மென் திசுக்களில் இயல்பாக இருக்கும் நல்ல கிருமிகள் அழிந்து, அங்கு நோயைப் பரப்பும் தீய கிருமிகள் பரவிவிடும்.

மாதவிடாய் நேரங்களில் பாட்ஸ் (Pads) மட்டுமே உபயோகியுங்கள்.உள்ளே வைக்கும் டம்புன்ஸ் (Tampons) கூடவே கூடாது

உள்ளாடைகள் எப்பொழுதும் பருத்தித் துணியால் ஆனதாக இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.
சில்க், நைலோன் போன்றவை ஈரத்தை உறிஞ்ச மாட்டாது.
அத்துடன் வியர்வையையும் உறிஞ்சமாட்டாது.
காற்றோட்டத்தையும் தடுக்கும். இவை காரணமாக அரிப்பும் தொடர்ந்து கிருமித் தொற்றும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அத்துடன் மிக இறுக்கமான உள்ளாடைகளும் கூடாது.

பாலுறுப்பை அண்டியுள்ள பகுதிகளில் வாசனை ஸ்ப்ரே, பவுடர் போன்ற பொருட்களையும் உபயோகிக்க வேண்டாம்.

ஈஸ்ட் கிருமித் தொற்று இருந்தால் லட்டோ பசிலஸ் உள்ள யோகட், தயிர் போன்றவற்றை உண்பது நல்லது. கடுமையான அன்ரிபயரிக் உபயோகிக்கும் போதும் ஈஸ்ட் தொற்றுதைத் தடுக்க உண்ணலாம்.

பாலுறவின்போது ஆணுறை உபயோகிப்பதன் மூலம் ஒருவரிலிருந்து மற்றவருக்கு கிருமிகள் பரவுவதைத் தடுக்கலாம்.

நீரிழிவு இருந்தால் உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை சரியான அளவில் கட்டுப்படுத்தி வையுங்கள். இல்லையேல் பங்கஸ் கிருமித்தொற்றும் ஏற்படும்.

எப்பொழுது டொக்டரிடம்

வெள்ளை படுதலுடன் காய்ச்சல், அடிவயிற்றில் வலி போன்றவை இருந்தால் கட்டாயம் மருத்துவரைக் காண வேண்டும். 

நீங்கள் உடலுறவு கொண்டவருக்கு சிபிலிஸ், கொனரியா, கிளமிடியா, எயிட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் இருந்திருக்கலாம் என சற்று சற்தேகம் இருந்தாலும் மருத்துவரை உடனடியாக அணுகுங்கள்.

வெள்ளை படுதலுக்கு மேலாக பாலுறுப்புப் பகுதியில் அரிப்பு, சிறிய கொப்பளங்கள், புண் போன்றவை இருந்தால் நிச்சயம் மருத்துவ உதவி அவசியம்.

எனவே வெட்கத்தை விட்டொழியுங்கள். உங்கள் உடல் நலத்தைப் பேண உங்கள் மருத்துவருடன் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகப் பேசுங்கள்.

நன்றி!!!

Reactions:

About Author

Advertisement

Post a comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top