Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: மேகமலை சரணாலயம் ஒரு சிறப்பு பயணம் - Mehamalai Sanctuary !!
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
தேனி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது மேகமலை. கேரள மாநிலத்தின் பெரியார் புலிகள் காப்பகத்துக்கும் , தமிழ...

தேனி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது மேகமலை. கேரள மாநிலத்தின் பெரியார் புலிகள் காப்பகத்துக்கும், தமிழ்  நாட்டில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வன விலங்கு சரணாலயத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது மேகமலை. 
சுமார் 600 சதுர கி.மீ பரப்பளவுள்ள இந்த வனப்பகுதிவனவிலங்கு சரணலயமாக வனத்துறை அறிவித்துள்ளது.பல்வேறு அரிய உயிரினங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. மேலும் இரண்டு முக்கிய வனப்பகுதிகளை இணைக்கும் பகுதியாக இருப்பதால் விலங்குகள் நடமாட இங்கு வாய்ப்புகள் அதிகம். இந்த வனப் பகுதியை வன விலங்கு சரணாலயமாக மாற்றுவதன் மூலம், விலங்குகள் வேட்டையாடப் படுவதை பெருமளவு குறைக்க முடியும்.

இந்த வனப் பகுதியானது புலி, யானை, கரடி, சிறுத்தை புலி, வரையாடு, மிளா, கேளையாடு, புள்ளி மான், காட்டெருமை, சோலை மந்தி, மலை அணில், நீர் நாய் மற்றும் இன்னும் பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. மிகவும் அரிய பறவையான இருவாச்சிகள் இங்கு காணப்படுகின்றன. சிறிய அளவிலான தேவாங்குகள் இந்த மலை பகுதியில் வாழ்கின்றன.
 பல்வேறு அரிய வகை தாவரங்கள், மரங்கள் மற்றும் பறவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது மேகமலை. எனவே இந்த வனப் பகுதியை வனவிலங்கு சரணாலயமாக மாற்ற வேண்டியது அவசியம், அவசரம். இந்த வனப்பகுதி, மேலும் இரண்டு முக்கிய வனங்களை இணைப்பதால் பெரிய அளவில் விலங்குகளையும் பறவைகளையும் பாதுகாக்க முடியும்


கொளுத்தும் கோடை வெப்பத்திற்கு இதமாக குளுமையான மலைப்பிரதேசங்களை மனம் நாடுவது இயற்கை. ஊட்டி, கொடைக்கானல் என்று எல்லோரையும் போல போகாமல் கூட்டம் அதிகம் சேராத மலைப் பிரதேசங்களுக்கு குடும்பத்தோடு சென்று வரலாம். மனம் அமைதியடைவதோடு இயற்கையின் அழகையும் இனிமையாக ரசிக்க முடியும். தமிழ்நாட்டில் உள்ள மேகமலை மலைவாசஸ்தலம் இயற்கை ஆர்வலர்களுக்கு, ஒரு சிறப்பு வாய்ந்த இடமாகும். நான்கு மலைச்சிகரங்கள் நடுவே அமைந்துள்ள பள்ளத்தாக்குதான் மேகமலை. இது கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ளது. உயர்ந்த மலைகள், அடர்ந்த மரங்கள், பசுமையான நிலபரப்பு, அழகிய ஏரிப்பகுதி என இயற்கை அழகுக் கொட்டிக் கிடக்கும் இடம் இது. மிக அழகான சாய்ந்த நிலப்பரப்பில் உள்ள தேயிலை மற்றும் காபி பயிர் தோட்டம் காண்பவர் கண்ணுக்கு விருந்தளிக்கும். மேகங்களின் தாய்வீடு மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி பச்சை பசேல் என விரிந்து பரந்து கிடக்கும் இது மேகங்களின் தாய்வீடு. மலை முழுவதும் மேகக் கூட்டம் கணப்படுவதாலேயே இது மேகமலை என்று பெயர் பெற்றுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் நகரிலி்ருந்து மலைப்பாதையில் மூன்று மணி நேரப் பயணம் செய்தால் மேகமலையை அடையலாம். மலைப்பாதையில் வழியெங்கும் ஆங்காங்கே குறுக்கிடும் அருவிகள், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் வீடுகள் என பயணமே ஒரு சுக அனுபவமாகும். பகல் நேர வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ். அதனால் எப்போதும் இதமான குளிர். சீசன் நேரம் என்றால் பகல் நேரத்தில் கூட ஸ்வெட்டர்" தேவைப்படும்.


வர்த்தக மயமாகாததால் மலைப் பகுதி சீர்கெடாமல் உள்ளது. மலையாறு அணை இரண்டு மலைகளுக்கு இடையே பிரமாண்டமாய் கட்டப்பட்டிருக்கிறது மலையாறு அணை. அணைத் தண்ணீரில் முகம் பார்க்கலாம். அத்தனை சுத்தம். திடீரென யானைக் கூட்டங்களின் படையெடுப்பும் இருக்கும். அவை தண்ணீர் அருந்துவதை தூர இருந்து வேடிக்கை பார்க்கலாம். காட்டு மாடு, மிகப் பெரிய அணில், வேணாம்பல் (ஹார்ன்பில்)என விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும். சபரிமலை சீஸன் காலத்தில் அந்த வனப்பகுதியில் இருக்கும் விலங்குகள் இடம் பெயர்ந்து பெரியார் அணைக்கட்டு, மேகமலைப் பகுதிகளுக்கு வந்துவிடும். ஆனால் மனிதர்கள் யாருக்கும் இன்றுவரை எந்த ஒரு விலங்கினாலும் தொந்தரவு ஏற்பட்டதில்லை என்பதுதான் வியப்பிற்குரிய விசயம். ஆன்மீக பிரியர்கள் மேகமலை அடிவாரத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயத்தை தரிசிக்கலாம். தேனி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுருளி தீர்த்தம் எனப்படும் சுருளி அருவிக்கும் சென்று நீராடலாம். எப்படிப் போகலாம் ? சின்னமனூரிலிருந்து மேகமலைக்கு பேருந்து வசதி உள்ளது. குறிப்பிட்ட நேரம் மட்டுமே இந்த வசதி உண்டு. கட்டணம் 20 ரூபாய். தனியாக வாகனம் மூலம் செல்பவர்கள் ஆண்டிப்பட்டியிலிருந்து கண்டமநாயக்கனூர் சென்று அங்கிருந்து நேராக மேகமலை போகலாம். குடும்பத்துடன் செல்பவர்கள் மாலைக்குள் மலையிலிருந்து இறங்கி விடுவது நல்லது. இருப்பினும் தங்குவதற்கு சில ஆயிரம் வாடகையில் ரிசார்ட்டுகளும் கிடைக்கும்.

நன்றி!!!


Reactions:

About Author

Advertisement

Post a comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top